இன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....?

போர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கடந்தவாரம் வங்கக் கடலில் உருவான ‘நிலம்‘ புயல் முல்லைத்தீவைத் தாக்கப் போவதாக பயமுறுத்தி விட்டு, தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து போனது. இந்தப் புயல், விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களையும் வெளியே கொண்டு வந்து விட்டது. இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் - கடற்கரை மணலில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த 5 ஆட்டிலறிகள், ஒரே நேரத்தில் படையினரின் கண்களில் அகப்பட்டன. இதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் பல ஆட்டிலறிகளை இலங்கை இராணுவத்தினர் மீட்டிருந்தனர். 

வாகரையிலும், தொப்பிக்கலவிலும், புதுக்குடியிருப்புக்கு மேற்கேயும், ஆனந்தபுரம் சமரின் போதும், தேவிபுரம் காட்டுப் பகுதியிலும் விடுதலைப் புலிகளின் ஆட்டிலறிகளை இலங்கைப் படையினர் கண்டுபிடித்திருந்தனர். ஆனால், இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலில் ஒரு ஆட்டிலறி கூட இராணுவத்தினரின் கைகளில் சிக்கவில்லை. 

                         
இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலில், 2009 மே 17ம் திகதி விடுதலைப் புலிகள் கனரக ஆயுதங்கள் பலவற்றை ஒரேயிடத்தில் வைத்து அழித்திருந்தனர். அவ்வாறு அழிக்கப்பட்ட பல டாங்கிகள், கவசவாகனங்கள், விமான எதிர்ப்புப் பீரங்கிகள் போன்றவற்றை தீயில் கருகிய நிலையில் இராணுவத்தினர் கண்டுபிடித்திருந்தனர். எனினும், அப்போது அழிக்கப்பட்ட நிலையில் கூட, ஒரு ஆட்டிலறியைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. போரின் கடைசி நாட்களில் அரசபடையினரால் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களில் பெரும்பாலானவை தன்னியக்கத் துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் போன்ற சிறிய ஆயுதங்கள் தான். 

ஆனந்தபுரம் சமருக்குப் பின்னர், விடுதலைப் புலிகளின் கனரக ஆயுதங்களை அரசபடையினரால் பெருமளவில் கைப்பற்ற முடியவில்லை. விடுதலைப் புலிகளிடம் கணிசமானவு ஆட்டிலறிகள் இருந்ததை அரசபடையினர் அறிந்திருந்த போதும், கடைசிநேரத்தில் அவை எங்கே போயின, அவற்றுக்கு என்னவாயிற்று என்ற கேள்வி இருந்தே வந்தது. 2006ம் ஆண்டுக்கும் 2009ம் ஆண்டுக்கும் இடையில் விடுதலைப் புலிகளின் 85 மி.மீ ஆட்டிலறி - 01, 122 மி.மீ ஆட்டிலறி - 01, 130 மி.மீ ஆட்டிலறிகள் - 08, 152 மி.மீ ஆட்டிலறிகள் - 05 என்பனவற்றை மீட்டதாக, பாதுகாப்பு அமைச்சு கடந்த ஆண்டு வெளியிட்டHumanitarian Operation Factual Analysis என்ற அறிக்கையில் கூறியிருந்தது. புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொத்தம் 15 ஆட்டிலறிகளில், 6 ஆட்டிலறிகள் அழிக்கப்பட்ட நிலையில் அல்லது பயன்படுத்த முடியாத நிலையில் மீட்கப்பட்டவை. எஞ்சியவை தான் பயன்பாட்டு நிலையில் இருந்தன. இந்தநிலையில் தான், முதல்முறையாக ஒரே நேரத்தில் - விடுதலைப் புலிகளின் 5 ஆட்டிலறிகளை ‘நிலம்‘ புயல் வெளியே கொண்டு வந்துள்ளது. 


2009 மே 18ம் திகதி போர் முடிவுக்கு வந்த பின்னர், முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினர் ஆயுதங்களையும் புலிகளின் ஏனைய பொருட்களையும் சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தியிருந்தனர். குறிப்பிட்ட சில சதுர கி.மீற்றர் பரப்பளவை மட்டும் கொண்ட அந்தக் குறுகிய நிலப்பரப்பில், இந்தத் தேடுதல்கள் சுமார் 3 ஆண்டுகள் வரை இடம்பெற்றிருந்தன. இந்தளவு காலமும் படையினரின் கண்களில் அகப்படாத இந்த ஆட்டிலறிகள் புயலினால் வெளிப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகள் போரின் கடைசி நேரம் வரை ஆட்டிலறிகளைப் பயன்படுத்தக் கூடிய நிலை இருந்திருக்கவில்லை. 


அதற்கு மூன்று காரணங்களைக் குறிப்பிடலாம். 

அவர்களிடம் இறுதிக்கட்டத்தில் போதிய ஆட்டிலறிக் குண்டுகள் இருக்கவில்லை. 


கப்பல்கள் மூலம் வெளியில் இருந்து குண்டுகளை கொண்டு வரும் வசதிகள் முற்றாகவே இல்லாமல் போனதால், அவற்றைப் பயன்படுத்த முடியாத கட்டம் ஏற்பட்டது. 

விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவம் கைப்பற்றிய ஆயுதங்களின் பட்டியலில், கைப்பற்றப்பட்ட மோட்டார் குண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஆட்டிலறிக் குண்டுகள் மிகமிகக் குறைவு. 

அதைவிட ஆனந்தபுரம் சமரின் போது, விடுதலைப் புலிகளின் ஆட்டிலறிகள் மட்டும் படையினரிடம் சிக்கவில்லை. 


ஆட்டிலறிகளை இயக்கும் திறமையான தளபதிகள், போராளிகள் பலரும் அந்த முற்றுகைச் சமரில் பலியாகினர். 


அவர்களில் பிரிகேடியர் மணிவண்ணன், கேணல் கோபால் போன்றவர்கள் ஆட்டிலறிப் படைப்பிரிவைச் சேர்ந்த முக்கியமான தளபதிகள். 


அதைவிட ஆட்டிலறிப் படைப்பிரிவைக் கையாண்ட மற்றொரு தளபதியான பிரிகேடியர் பானுவும் இந்தச் சமரில் படுகாயமடைந்தார். 


போரின் இறுதி நாட்களில் ஆட்டிலறிக் குண்டு கையிருப்புக் குறைந்து போனதாலும், அவற்றை இயக்கும் திறமையான போராளிகளின் பற்றாக்குறையாலும், ஆட்டிலறிகளை முன்னரே புலிகள் புதைத்து விட்டதாக கருதப்படுகிறது. அதேவேளை மோதல் சிறிய இடத்துக்குள் குறுகிப் போனபோது ஆட்லறிகளைப் பெரிதாகப் பயன்படுத்த முடியாத நிலையும் புலிகளுக்கு இருந்தது. 


கண்ணுக்கு முன்னே நின்ற அரச படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு அங்கே ஆட்டிலறிகள் தேவைப்படவில்லை. அவற்றை குறுந்தூரத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தவும் முடியாது. அதேவேளை, பின்புலப் படைத்தளங்களை அவற்றின் மூலம் தாக்குவதாலும் எதையும் சாதிக்க முடியாது என்பதால், புலிகள் முன்னரே அவற்றை பாதுகாப்பாக மறைத்திருக்க வாய்ப்புகள் உள்ளன. போரின் கடைசி நாட்களில் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் இந்த ஆட்டிலறிகள் புதைக்கப்பட்டிருந்தால், அவை நிச்சயம் இராணுவத்தினரின் கண்களில் சுலபமாகவே சிக்கியிருக்கும். அதேவேளை, இந்த புதைப்பு நடவடிக்கையை அறிந்த புலிகள் எவரும் அரச படையினரிடம் சிக்கவில்லைப் போலவும் உள்ளது. அப்படி எவராவது சிக்கியிருந்தால், அவர்களிடம் இருந்து இதுபற்றிய தகவல்களை படைத்தரப்பினர் விசாரணைகளின் போது கறந்திருப்பார்கள். சிலவேளைகளில் அறிந்திருந்த ஒரு சிலர் இதுபற்றி மூச்சு விடாமல் இருந்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எவ்வாறாயினும் இந்த அட்டிலறிகள் வெளிப்பட்டதன் மூலம், புலிகளின் ஆயுதப் புதையல்கள் இன்னமும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை என்ற உண்மையை உணர்த்தியுள்ளது. 


இந்தநிலையில், விடுதலைப் புலிகளின் இந்த ஆட்டிலறிகள் அவர்களுக்கு எவ்வாறு கிடைத்தன? 


இவை வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்டவையா அல்லது அரசபடையினரிடம் இருந்து கைப்பற்றப்பட்டவையா என்ற கேள்வி வலுப்பெற்றுள்ளது. அதேவேளை, விடுதலைப் புலிகள் ஆட்டிலறிகளை அரசபடையினரிடம் இருந்து கைப்பற்றிய சம்பவங்கள் ஒரு சில மட்டும் தான். 


முல்லைத்தீவில் இரண்டு 122 மி.மீ ஆட்டிலறிகள், புளுக்குணாவவில் ஒரு 85 மி. மீ ஆட்டிலறி, ஆனையிறவில் மூன்று 152 மி.மீ ஆட்டிலறிகள், மற்றும் இரண்டு 122 மி.மீ ஆட்டிலறிகள் என்று மொத்தம் 8 ஆட்டிலறிகள் தான் இராணுவத்தினரிடம் இருந்து புலிகள் கைப்பற்றியிருந்தனர். 


முல்லைத்தீவில் ஆட்டிலறிகள் கைப்பற்றப்பட்டதை அடுத்து அரசபடையினர், தாக்குதல் களத்துக்கு வெளியே வைத்து அவற்றைப் பயன்படுத்தும், விரைவாக பின்நகர்த்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தனர். இதனால், ஓயாதஅலைகள் – 3 நடவடிக்கையின் போது படைத்தளங்கள் பல் தொடர்ச்சியாக வீழ்ந்த போதிலும், ஆனையிறவைத் தவிர வேறு இடங்களில் படையினரின் ஆட்டிலறிகள் புலிகளிடம் சிக்கவில்லை. ஆனையிறவில் கூட முற்றுகையில் இருந்து வெளியே கொண்டு செல்ல முற்பட்டபோது தான், அவை புலிகளின் கையில் அகப்பட்டன. 


புளுக்குணாவவில் புலிகள் கைப்பற்றிய 85 மி.மீ ஆட்டிலறியை படையினர் மீளக் கைப்பற்றி விட்டனர். ஆனால், முல்லைத்தீவிலும் ஆனையிறவிலும் இழக்கப்பட்ட நான்கு 122 மி.மீ ஆட்டிலறிகளில் ஒன்றே ஒன்று தான் மீளக் கிடைத்துள்ளது. மீதமுள்ள மூன்று 122 மி.மீ ஆட்டிலறிகளும் எங்கே என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. அதேவேளை, இதுவரை ஒன்பது 152 மி.மீ ஆட்டிலறிகள் படையினரிடம் சிக்கியுள்ளன. ஆனால், அரசபடையினர் புலிகளிடம் பறிகொடுத்தது மூன்றை மட்டும் தான். இவைதவிர, 130 மி.மீ ஆட்டிலறிகள் ஒன்பதும் படையினரிடம் சிக்கியுள்ளன. இத்தகைய ஆட்டிலறிகளை அரசபடையினர் ஒரு போதும் விடுதலைப் புலிகளிடம் இழக்கவில்லை. இந்தநிலையில், அரசபடையினர் பறிகொடுத்ததையும், விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்டதையும் வைத்துக் கணக்குப் போட்டால், ஆட்டிலறிகளை வெளிநாடுகளில் இருந்து புலிகள் இறக்குமதி செய்துள்ளனர் என்பது உறுதியாகும். எவ்வளவு ஆட்டிலறிகள் விடுதலைப் புலிகளிடம் இருந்தன என்ற சரியான கணக்கு படைத்தரப்பிடம் இருக்குமா என்பது சந்தேகம் தான். அவ்வாறு ஒரு தரவு கிடைத்திருந்தால், முள்ளிவாய்க்காலில் மூன்றரை ஆண்டுகள் கழித்து ஆட்டிலறிகள் வெளியே கிளம்பும் நிலை ஏற்பட்டிருக்காது. 



புலிகளிடம் இருந்து அரசபடையினர் இதுவரை கைப்பற்றியுள்ள ஆட்டிலறிகள் அனைத்துமே சீனாவில் தயாரிக்கப்பட்டவை. ஆனால், அவற்றை சீனா நேரடியாக அவர்களுக்கு விற்கவில்லை. சீனாவிடம் இந்த ஆட்டிலறிகளைப் புலிகள் வாங்குவதற்கு ஆபிரிக்க நாடான எரித்ரியா உதவியதாக தகவல்கள் உள்ளன. எனினும் அதுதொடர்பான முழுமையான விசாரணைத் தகவல்கள் வெளிவரவில்லை. இந்தநிலையில், மீண்டும் அதிகளவு ஆட்டிலறிகள் படையினரின் கைகளில் சிக்கியுள்ள நிலையில், இந்த ஆட்டிலறிகள் தொடர்பான சர்ச்சையும் சந்தேகங்களும் மீளவும் வலுப்பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டு மூன்றரை ஆண்டுகளாகி விட்ட போதிலும், அந்த இயக்கம் பற்றிய மர்மங்கள் பல, இன்னமும் முழுமையாக வெளிவராமலேயே உள்ளன. இதனைத் தான் இந்த ஆட்டிலறிகள் மூலம் ‘நிலம்‘ புயல் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இன்போ தமிழின் இராணுவ ஆய்வாளர் சுபத்ரா
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment